சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கத்திற்கு எதிரான மனு: ஜூலை 20 இற்கு ஒத்திவைப்பு
வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, உதித்த எகலஹேவா, சஞ்சய் ராஜரத்தினம், மனோஹர டி சில்வா, குவேர டி சொய்சா மற்றும் திஸத் விஜயகுணவர்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதித் தலைவரும் பிரதிப் பொதுச்செயலாளருமான சமிந்த குலரத்ன, தனது பணி இடைநீக்கத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்துள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வினால் கடந்த வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பது குறித்த ஆரம்பகட்ட சமர்ப்பிப்புகளை முன்வைப்பதற்காக வழக்கை வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது பணி இடைநீக்கம் மற்றும் தனக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆகியன நிர்வாகச் சட்டம் மற்றும் இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சமிந்த குலரத்ன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டபூர்வ ஒழுக்காற்றுப் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட வகையில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஒருவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அது செல்லுபடியற்றது என்று அறிவிக்குமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனு தொடர்பான மேலதிக நடவடிக்கைகாக நீதிமன்றம் ஏற்பதற்குப் போதுமான முதன்நோக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தாம் தயாராக இருப்பதாக அறிவித்தார். எனினும், வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான பாராளுமன்ற சபாநாயகர் சார்பில் ஆஜரான மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரன், இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஆரம்பகட்ட முற்கூட்டிய ஆட்சேபனைகளை எழுப்ப சபாநாயகர் உத்தேசித்துள்ளதாக நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.
பாராளுமன்ற பணியாளர்களின் நிர்வாக மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்கள், அரசியலமைப்பின் 140 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்ற மீளாய்வுக்கு உட்பட்டவை என்பதே மனுதாரரின் பிரதான நிலைப்பாடாகும்.
மேலும், காராளுமன்ற பணியாளர்கள் ஆலோசனைக் குழுவானது பாராளுமன்ற பணியாளர்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வ நிர்வாக அமைப்பாகும் என்றும், அது பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பெறக்கூடிய சட்டமியற்றும் அல்லது விவாதிக்கும் பாராளுமன்றக் குழு அல்ல என்றும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வழக்கின் முந்தைய விசாரணையின் போது, இந்த பணி இடைநீக்கம் முறையான ஒழுக்காற்று நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவதானித்த சட்டமா அதிபர், இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ளுமாறு இருதரப்பிற்கும் பரிந்துரைத்திருந்தார்.
எனினும், அந்த சுமுகத் தீர்வை சபாநாயகர் நிராகரித்ததை அடுத்து, இவ்வழக்கில் தாம் எந்தவொரு தரப்பிற்காகவும் ஆஜராகப்போவதில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதால், தற்போது அவர் எந்தவொரு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, உதித்த எகலஹேவா, சஞ்சய் ராஜரத்தினம், மனோஹர டி சில்வா, குவேர டி சொய்சா மற்றும் திஸத் விஜயகுணவர்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனுவை அனுமதிப்பதா என்பது குறித்த மனுதாரரின் சமர்ப்பிப்புகளை ஜூலை 20 அன்று பரிசீலிப்பதாகவும், அதன் பின்னரே பிரதிவாதிகளின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் குறித்து ஆராயப்படும் என்றும் உத்தரவிட்டது.





