காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆஸி.உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி
முன்னைய ஜனாதிபதிகளிலிருந்து தற்போதைய ஜனாதிபதி வேறுபடுகிறார் எனக் கூறமுடியாது அல்லவா?' என்றும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் கேள்வி எழுப்பினர்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த்துக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு 14-01-2026அன்று யாழில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த பிரதிநிதிகள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகப்பொறிமுறை எனக்கூறி நிறுவப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்திறனற்ற நிலை மற்றும் அக்கட்டமைப்பின் மீதான தமது அவநம்பிக்கை குறித்தும் விளக்கமளித்தனர்.
'நாம் கடந்த காலந்தொட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அவசியமில்லை என்றும், அதன்மீது எமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறிவந்திருக்கிறோம். அவ்வாறெனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், நீதியை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எம்மைச் சந்தித்து, இதுபற்றி எமது நிலைப்பாட்டைக் கேட்டறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. மாறாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அவர் தன்னிச்சையாக முன்னெடுக்கிறார். அவ்வாறிருக்கையில் முன்னைய ஜனாதிபதிகளிலிருந்து தற்போதைய ஜனாதிபதி வேறுபடுகிறார் எனக் கூறமுடியாது அல்லவா?' என்றும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் கேள்வி எழுப்பினர்.
அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்காவில் வெற்றிகரமாக இயங்கிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக்கொண்டு இங்கும் அவ்வாறானதொரு ஆணைக்குழுவை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களை இருவேறுபடுத்திக் காண்பித்து, அப்பொறிமுறை இலங்கைக்குப் பொருத்தமானது அல்ல என்பதே தமது நிலைப்பாடு எனத் தெரிவித்தனர்.
இவற்றை செவிமடுத்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் கரிசனைகள் குறித்து தான் ஜனாதிபதியிடம் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வாக்குறுதியளித்தார்.
அத்தோடு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான கட்டமைப்புக்களுக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் எத்தகைய கட்டமைப்புக்கள் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் உள்ளகப்பொறிமுறைகள் மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும், அவ்வாறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்படும் பட்சத்தில், அவற்றின் சகல உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் அபிப்பிராயங்களைக் கருத்திற்கொண்டே நியமிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.





