நாட்டின் பல மாகாணங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி
நாட்பட்ட சுவாச நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு திடிர் மூச்சுத் திணறல் அல்லது சுவாசக் கோளாறு ஏற்படுமாயின் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியம்.
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 50 முதல் 200 வரை பதிவாகியுள்ளதாகவும், இதனால் காற்றின் தரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் வளி மாசடைந்துள்ளமை தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 21ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் வளி மண்டலம் அதிகளவில் மாசடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறைவடைந்துள்ளதால் நீண்டகாலச் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாட்பட்ட சுவாச நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு திடிர் மூச்சுத் திணறல் அல்லது சுவாசக் கோளாறு ஏற்படுமாயின் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியம்.
நாட்டின் எல்லைப் பகுதிக்குள் நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளமை ஆகிய இயற்கை காரணிகளால் காற்றின் தரம் குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், காற்று மாசடைவதற்கு மனித நடவடிக்கைகளே பிரதான காரணமாக அமைகின்றன. தேவையற்ற முறையில் தீ மூட்டுதல், வாகனங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல் போன்ற செயற்பாடுகளால் வளி மண்டலம் மேலும் மாசடைகின்றது. ஆகையால் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தற்போதுள்ள நிலைமை குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை காற்றின் தரக் குறியீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், வளி மண்டலத்தின் தரம் குறித்து அவதானித்து வருகிறது என்றார்.





