அமெரிக்கத்தூதுவர், ஜனாதிபதியின் செயலாளர் பதவிகளில் மாற்றங்கள் இல்லை - பேச்சாளர்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 26-05-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் புதிய பதவிகளை வழங்குவது குறித்தோ அல்லது ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குறுகிய நலன்களைக் கொண்ட ஒரு சிறு குழுவினரே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான போலிச் செய்திகளை உருவாக்கிப் பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 26-05-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக இராஜதந்திரக் கடமைகளை ஆற்றிவரும் மஹிந்த சமரசிங்க, கடந்த காலங்களில் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவராவார். எனினும், அதன் பின்னர் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, தற்போது தூதுவர் பதவியை மாத்திரமே வகித்து வருகின்றார்.
இவ்வாறான பின்னணியில், இந்த இராஜதந்திரப் பதவிக்கு அப்பால் அவருக்கு தற்போதைய எமது அரசாங்கத்தில் ஏதேனும் புதிய உயரிய பதவியொன்றை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலோ அல்லது அரசாங்கத் தரப்பிலோ எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
அதேபோன்று, தற்போதைய ஜனாதிபதி செயலாளர் பதவியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கோ அல்லது புதிய ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கோ எமது அரசாங்கம் எவ்விதத்திலும் எதிர்பார்க்கவுமில்லை. சுயநல நோக்கங்களைக் கொண்ட ஒரு மிகச் சிறு குழுவொன்று, அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில், தங்களுக்குள் இவ்வாறான முற்றிலும் உண்மைக்கு புறம்பான போலிச் செய்திகளைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டு சமூகத்தில் பரப்பி வருகின்றன என்றார்.





