ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பருக்கு ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அரச நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு 08-07-2026 அன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி சமதரி பியசேன, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக ஒரு திகதியை குறிப்பிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, ' இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்த மொத்தத் தொகையில் பாதியளவு தொகை வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், எனது சேவைப்பெறுநருக்கு அந்த வாகனங்களைப் பிரித்தானிய அரசாங்கமே வழங்கியிருந்தது.' என்றார்.
இது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றிய நடைமுறைகள் அடங்கிய ஆவணமொன்றை அரச சட்டத்தரணியிடம் ஒப்படைத்த ஜனாதிபதி சட்டத்தரணி,இது குறித்தும் ஒரு விசாரணையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.





