2.4 கோடி ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் 9 சீன பிரஜைகள் கைது
சந்தேகநபர்களை சோதனைக்குட்படுத்திய போது, அவர்கள் தமது உடற்பகுதிகளிலும் ஆடைகளுக்குள்ளும் 'செலோடேப்' மூலம் ஒட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான இலத்திரனியல் சாதனங்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 2 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த 9 சீன பிரஜைகள் முன்தினம் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினி மற்றும் இணைய வழியிலான நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சீனாவின் குன்மிங் நகரிலிருந்து 17-04-2026 அன்று வருகை தந்திருந்த இக்குழுவினர், விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை சோதனைக்குட்படுத்திய போது, அவர்கள் தமது உடற்பகுதிகளிலும் ஆடைகளுக்குள்ளும் 'செலோடேப்' மூலம் ஒட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான இலத்திரனியல் சாதனங்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டன. இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 1 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான பயன்படுத்தப்பட்ட 383 கையடக்கத் தொலைபேசிகள், 64 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 101 டேப்லட் கணினிகள் மற்றும் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய 6 வைஃபை ரௌட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 24 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொடர்பில் விமான நிலைய சுங்பப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





