சுரேஷ் சலே கரப்பான் பூச்சி, எலிகளுடன் சிறைவாசம் அனுபவிப்பதாக உதய கம்மன்பில விசனம்
தனது தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றும் தனது குடும்பமே நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிலையில் தனக்கு இழைக்கப்படும் இந்த அநீதி குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய உளவுத்துறையின் முன்னால் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாத தடுப்பு பிரிவில் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகளுடன் சிறைவசம் அனுபவிக்கும் நிலை கவலையாக உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை 11-03-2026 அன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உளவுத்துறையின் முன்னால் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு சிறைச்சாலையில் உள்ள சாதாரண கைதிக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. கழிவறைக்கு முன்னால் அமைந்துள்ள தண்டனை அறையிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் நிலவும் கடும் துர்நாற்றம் காரணமாக ஏற்கனவே ஒற்றைத் தலைவலி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சலேயின் நிலைமை மோசமடைந்துள்ளது. இதற்காக அவர் உட்கொள்ளும் மருந்தின் அளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் போதிய வெளிச்சமோ அல்லது காற்றோட்டமோ இல்லை. தரையில் பத்திரிகையை விரித்து அதிலேயே அவர் உறங்குகிறார். இரவு நேரங்களில் அவர் மீது எலிகள் மற்றும் கரப்பான்கள் ஊர்ந்து செல்வதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இவ்வாறான ஒரு அறையில் இதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. மற்றவர்களுடன் உரையாடுவதற்கு கூட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வாசிப்பதற்கு புத்தகங்களோ அல்லது பத்திரிகைகளோ வழங்கப்படுவதில்லை.
அசாத் மௌலானா என்பவர் சனல் -4 வுக்கு வழங்கிய அடிப்படையற்ற ஒரு வாக்குமூலத்தை வைத்தே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எவ்விதமான சாட்சியங்களும் இன்றி நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போரிட்ட ஒரு இராணுவ வீரர் இவ்வாறு நடத்தப்படுவது வேதனையளிக்கிறது . விடுதலைப்புலிகளிடத்தில் அகப்பட்டிருந்தால்கூட இவ்வாறு நடத்தப்பட்டிருக்க மாட்டேன என்றும் அவர் குறிப்பிட்டார். சுரேஷ் சலே கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்.
தனது தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றும் தனது குடும்பமே நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிலையில் தனக்கு இழைக்கப்படும் இந்த அநீதி குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
தற்போது சுரேஷ் சலே கடும் மன உளைச்சலில் இருப்பதால் அவருக்கு உளவியல் ஆலோசனை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகும் என்றார்.





