கொழும்பு துறைமுக கப்பல் கட்டும் தளத்தை கைமாற்றியமையால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - புபுது ஜயகொட
அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்புகளும் ஒரே கொள்கையிலேயே பயணிக்கின்றன.
கப்பல் கட்டும் துறையில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை இந்தியாவின் அரச நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாக இந்திய தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனூடாக கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களுக்குச் சொந்தமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளும் வளங்களும் தற்போது இந்தியாவின் வசமாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கப்பல் கட்டுமானம் மற்றும் திருத்தப் பணிகளில் அரசாங்கம் ஈடுபடக் கூடாது என வாதிட்ட லிபரல் கொள்கைவாதிகளின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம் இறுதியில் அந்த நிறுவனத்தை இந்திய அரச நிறுவனத்துக்கே விற்பனை செய்துள்ளது.
மிக முக்கியமாக குறித்த நிறுவனமானது இந்திய பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான மற்றும் போர்க்கப்பல்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இவ்வாறானதொரு நிறுவனம் இலங்கையின் துறைமுக வளங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா சம்பந்தப்படும் ஒரு போரின் போது கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் எதிர்த்தரப்பினரின் நேரடி இலக்குகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இரகசியமாக கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைகிறது.
இலங்கைக்குள் இந்தியாவின் ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களை பராமரிக்க அந்த ஒப்பந்தத்தின் மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய அல்லது பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான போரில் இலங்கை தேவையற்ற விதத்தில் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
ஜப்பானிய நிறுவனத்திடம் இருந்த பங்குகளை இந்தியாவுக்கு விற்பனை செய்வதில் இலங்கையின் தலையீடு இல்லை எனக் கூறப்படும் வாதங்கள் அடிப்படையற்றவை. ஜப்பானிய நிறுவனத்துக்கு ஆரம்பத்தில் பங்குகளை வழங்கும்போது ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அவற்றை மற்றுமொரு தரப்புக்கு விற்பனை செய்வதற்கு திறைசேரியின் அனுமதி அவசியமாகும்.
இந்திய நிறுவனத்துக்கு இப்பங்குகளை விற்க வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இந்தியாவுடனான இரகசிய இணக்கப்பாடுகள் காரணமாக அரசாங்கம் இந்த உடன்படிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
மக்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் இந்தத் துரோகச் செயல் தொடர்பில் ஊழல் மோசடிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் திருட்டு மற்றும் ஊழலுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் நீண்டகாலப் பிரசாரமும் தற்போதைய அரசாங்கத்தை திருடர்கள் என முத்திரை குத்த முயற்சிக்கும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் செயற்பாடுகளும் நாட்டின் எதிர்காலம் குறித்த பாரிய பிரச்சினைகளை மக்கள் உணர்ந்து கொள்ள முடியாதவாறு மறைத்துள்ளன. இந்த மௌனத்திற்காக எதிர்கால சந்ததியினர் பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்புகளும் ஒரே கொள்கையிலேயே பயணிக்கின்றன. எனவே மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோற்கடித்து நாட்டுக்கும் மக்களுக்கும் விசுவாசமான ஒரு கொள்கையை முன்னெடுப்பதற்கு புதிய மக்கள் சக்தி ஒன்று திரட்டப்பட வேண்டும் என்றார்.





