சுமந்திரனுடன் நாமல் விசேட சந்திப்பு
தேர்தல் சட்ட திருத்தம் சம்பந்தமான விடயங்கள், எல்லை நிர்ணயம் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
சாணக்கியன் எம்.பியின் தனிநபர் பிரேரணை முன்னகர்த்துதல் உட்பட மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தினை வலியுறுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடத்தில் உறுதி அளித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு 15-11-2025 கொழும்பில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இந்தச்சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடவில் முன்னெடுக்கவுள்ள பேரணி தொடர்பில் நாமல் ராஜபக்ஷவும், சகார காரியவசமும் தெளிவுபடுத்தும் நோக்கில் தான் உரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, நுகேகொடவில் குறித்த பேரணி எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் அதில் பொதுஜனபெரமுன எதற்காக பங்களிப்;பை வழங்குகின்றது என்பது தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன், இலங்கைத் தமிழரசுக்கட்சியும் குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். எவ்வாறாயினும் இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது மத்திய குழுக்கூட்டத்தில் குறித்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதில்லை என்று தீர்மானித்த விடயத்தினை அவர்களுக்கு குறிப்பிட்டேன்.
மேலதிகமாக, மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதப்படுத்தப்பட்டு வருவது தொடர்பிலும் அந்த விடயம் சம்பந்தமாக ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அச்சமயத்தில் தேர்தல் சட்ட திருத்தம் சம்பந்தமான விடயங்கள், எல்லை நிர்ணயம் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மாகாணங்களுக்கான தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்படுகின்ற நிலையில் அதனை நடத்துவதற்குரிய அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். எல்லைநிர்ணயம், பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை முன்னெடுத்து மீண்டும் பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது தற்போதைய நிலையில் அவசியமாகின்றது.
ஆகவே அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, தமது கட்சி அதற்கான ஒத்துழைப்புக்களை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் வழங்குவதற்கு உறுதியளித்தார் என்றார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதுகுறித்து விளக்கமளிப்பதற்கான சுமந்திரனை சந்தித்தேன். இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக, எமது எதிர்ப்பு பேரணியின் நிகழ்ச்சி நிரல் பற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டியது முக்கியமானதாகும்.
அத்தோடு சமகாலத்து முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள், மேலும் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்ற விடத்தில் இருதரப்பினரும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதோடு உள்ளுராட்சி நிர்வாகத்தினை வலுப்படுத்துவது தொடர்பிலும் உரையாடினோம் என்றார்.





