பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சேத மதிப்பீடுகள் இன்றி 5 இலட்சம்: அமைச்சர் ஆனந்த விஜேபால
தித்வா சூறாவளியின் பின்னர் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், முறையான சுற்றுநிரூபங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னரே ஆரம்பக்கட்ட நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
பேரிடர் நிலைமையால் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக, தனித்தனியாக சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் 500,000 ரூபா வீதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கோபேகனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 'பிரஜ சக்தி' (மக்களின் சக்தி) முன்முயற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் சுற்று நிரூபம் தயாரிக்கப்பட முன்னரே 50 000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு அறிவிக்கப்பட்டது. அனர்த்தங்களால் முற்றாக சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமமைந்த வீடுகள் மற்றும் வெள்ள நீர் அல்லது மண் உட்புகுந்த வீடுகள் என அனைத்துக்கும் இந்த கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டன.
அதேபோன்று வீடுகளைத் தூய்மைப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட 25 000 கொடுப்பனவுகளும் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளை முன்னரை விட சிறந்த நிலையில் மீளப் புனரமைத்துக் கொடுப்போம். இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் நாம் மீட்டுக் கொடுப்போம். மக்களின் பக்கமிருந்தே நாம் அனைத்தையும் சிந்திக்கின்றோம்.
தித்வா சூறாவளியின் பின்னர் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், முறையான சுற்றுநிரூபங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னரே ஆரம்பக்கட்ட நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
பகுதியளவில் சேதமடைந்த 120,000 இற்கும் அதிகமான வீடுகளுக்கான விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும். இது நிவாரணங்களை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, சரியான நேரத்தில் உதவிகளை உறுதி செய்வதற்காக, மதிப்பீடுகள் ஏதுமின்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 500,000 ரூபா நிலையான தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், முறையான சேத மதிப்பீட்டை மேற்கொள்ள விரும்பும் குடும்பங்கள் இந்த நிலையான கொடுப்பனவைப் பெறுவதைத் தவிர்க்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட சேதத்தின் மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். மதிப்பீடு செய்யப்பட்ட சேதத்தின் மதிப்பு 2.5 மில்லியன் ரூபா அல்லது 5 மில்லியன் ரூபாவாக இருந்தாலும், அரசாங்கம் அதற்கேற்ப முழுமையான மதிப்பீட்டுத் தொகையை வழங்கும் என்றார்.





