தேர்தலுக்கு பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராயுங்கள் - விசேட செயற்குழுவில் எதிரணி
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த விடயத்தை வலியுறுத்திய போது, குழுவின் தலைவரான விஜித்த ஹேரத் ' மாகாணசபைத் தேர்தல் இன்று நெருக்கடிக்குள்ளாகுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் விரைவாக நடத்துமாறும், தேர்தலுக்கு பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விசேட செயற்குழுவில் வலியுறுத்தியுள்ளனர்.
மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி செயற்குழு மீண்டும் கூடவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழு 17-03-2026 அன்று பாராளுமன்ற குழு அறை 08 இல் காலை 11 மணிக்கு முதன்முறையாக கூடியது.
பாராளுமன்ற விசேட செயற்குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்கவை தவிர்த்து ஏனைய உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
மாகாண சபை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் நோக்கத்தை குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் தெளிவுப்படுத்தியுள்ளார்.இதன் பின்னர் குழுவின் உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரான சாணக்கியன் இராசமாணிக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது,பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்திருந்தது.
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு கடந்த காலங்களில் தனிநபர் பிரேரணைகளை முன்வைத்தோம். அவற்றை தற்போது அரசாங்கம் விரும்பினால் அரசாங்கத்தின் பிரேரணையாக கொண்டு வரலாம். அப்போது தேர்தலை விரைவாக நடத்தலாம் என்று யோசனை முன்வைத்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன்,எட்டாவது பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல் முறைமை தொடர்பான தெரிவுக்கு முன்னிலையான தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பழைய விகிதாசார தேர்தல் முறைமைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த குழுவின் அறிக்கைக்கு சார்பாக 08 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக காணப்படுகிறது. முதலில் தேர்தலை நடத்துங்கள் பின்னர், தேர்தல் முறைமை குறித்து ஆராயலாம்.
எல்லை நிர்ணய அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆராய்ந்தால் மீண்டும் தாமதம் ஏற்படும். ஆகவே தாமதங்களை தவிர்த்து தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த விடயத்தை வலியுறுத்திய போது, குழுவின் தலைவரான விஜித்த ஹேரத் ' மாகாணசபைத் தேர்தல் இன்று நெருக்கடிக்குள்ளாகுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்டு கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார' மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக நாங்கள் செயற்படவில்லை. உங்களின் கட்சி தான் மாகாண சபைக்கு எதிராக செயற்பட்டு நாட்டுக்கு தீ வைத்தது, மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை நாங்கள் தான் எடுத்தோம்' என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த அந்த விடயங்கள் பற்றி பேசினால் நீண்ட விவாதத்துக்குச் செல்ல நேரிடும். ஆகவே தற்போது காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். சட்ட முறைமையில் காணப்படும் சிக்கலுக்கு ஆலோசனை பெறுவதற்கு சட்டமா அதிபரையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகளை அடுத்த கூட்டத்துக்கு அழைப்போம் என்று அறிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 07 ஆம் திகதி மீண்டும் கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.





