வெடுக்குநாறி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி - அமைச்சர் சுனில் செனவி
இந்த பூமியின் நிர்வாக பணிகள் மத்திய கலாசார நிதியத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகிறது.
வவுனியா வெடுக்குநாறி மலையை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்துக்குரியது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சட்டவிரோத நிர்மாணிப்புக்கள் காணப்படுவதால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. தொல்லியல் திணைக்களம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த பகுதியில் எவருக்கும் மத வழிபாடுகளில் ஈடுபட எவ்வித தடையும் கிடையாது. குருந்தூர் மலையை அண்மித்த 229 ஏக்கர் நிலப்பகுதியை தொல்பொருள் பகுதியாக அறிவிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள தென புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-04-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துள்ளார். இந்த பிரதேசத்தில் தூரநோக்கமற்ற வகையில் எடுத்த தீர்மானங்களால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
இலங்கை தொல்பொருள் திணைக்களம் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் பெரும்பாலான தொல்லியல் அடையாளங்களின் பின்னணியில் பௌத்த மத அடையாளங்கள் உள்ளன.இதனை மறுக்க முடியாது. தொல்லியல் என்பது மதத்தை முன்னிலைப்படுத்தியதல்ல.
இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மத அடையாளங்களுடனான தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அவற்றை பௌத்த மத அடையாளமாக மாற்றுவதற்கு எவரும் முயற்சிக்கவில்லை.
தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட பூமியில் தான் திருகோணேச்சரம் ஆலயம் அமைந்துள்ளது.இருப்பினும் அந்த பூமி தனித்ததொரு தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே தொல்லியல் தொடர்பான சட்டங்களை முறையாக ஆராய்ந்து அதற்கமைய செயற்பட வேண்டும்.தவறான புரிதல்கள் முரண்பாடுகளை ஏற்படுத்தும்.
இந்த பூமியின் நிர்வாக பணிகள் மத்திய கலாசார நிதியத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் கலாசார நிதியத்தால் அறவிடப்படுவதில்லை.
தாந்தாமலை ஆலயத்தை அண்மித்த பகுதியின் வனப்பகுதி குறித்து விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆய்வுகளின் பின்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.ஆய்வுகளை மிகவும் அவதானத்துடன் முன்னெடுக்க வேண்டும். சட்டவிரோத குடியிறுப்பாளர்களை அவதானத்துடன் வெளியேற்ற வேண்டும். கடந்த காலங்களில் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. தந்தாமலை ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகிறது.
குச்சவெளி பகுதியில் பல தொல்லியல் இடங்கள் காணப்படுகின்றன. அவற்றை விகாரைகள் என்று குறிப்பிட வேண்டாம். இந்த பகுதியில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதியளிக்கவில்லை. தற்போது உள்ள விகாரை பல ஆண்டுகள் பழமையானது.
குருந்தூர் மலை தொல்லியல் பாதுகாக்கப்பட்ட பகுதியான அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியை அண்மித்த பகுதியில் தொல்லியல் அடையாளங்கள் காணப்படுவதால் 229 ஏக்கர் காணி பகுதியை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அடையாளப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குருந்தூர் குளம் தொல்லியல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியில் காணப்படுவதால் அந்த குளம் தொடர்பில் தொல்லியல் திணைக்களம் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை. குறித்த குளத்தில் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு தொல்லியல் திணைக்களம் தடைவிதிக்கவில்லை.
வவுனியா வெடுக்குநாறி மலையை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்துக்குரியது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சட்டவிரோத நிர்மாணிப்புக்கள் காணப்படுவதால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. தொல்லியல் திணைக்களம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டவிரோத நிர்மாணிப்புக்களால் தொல்பொருள் அடையாளங்கள் அழிவடைந்துள்ளன. இந்த பகுதியில் எவருக்கும் மத வழிபாடுகளில் ஈடுபட எவ்வித தடையும் கிடையாது.சகல இனத்தவர்களுக்கும் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.சட்டத்துக்கு அமைவாகவும், முரண்பாடற்ற புரிதலுடன் செயற்படுகிறோம் என்றார்.





