ஜெய்சங்கரின் வருகை இந்தியாவின் வலுவான நட்பை பிரதிபலிக்கிறது அமைச்சர் விஜித்த ஹேரத்
பேரனர்த்த காலப்பகுதியில் இந்திய வழங்கிய 1000 தொன்களுக்கும் மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே தாமதமின்றி விநியோகிக்கப்பட்டன.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்த நிலைமையைத் தொடர்ந்து, இவ்வேளையில் இலங்கையுடனான இந்தியாவின் வலுவான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் வருகை பாராட்டுக்குரியது. இவ்விஜயம் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் நீடித்த கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளிவிவகார அசை;சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 23-12-2025அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடினார். அவரைத்தொடர்ந்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்துப்பேசிய ஜெய்சங்கர், அதனையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார். அச்சந்திப்பில் விஜித்த ஹேரத் மேலும் கூறியதாவது:
கொழும்புக்கு மீண்டும் வருகைதந்திருக்கும் கலாநிதி ஜெய்சங்கரை அன்புடன் வரவேற்கின்றேன். 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்த நிலைமையைத் தொடர்ந்து, இவ்வேளையில் இலங்கையுடனான இந்தியாவின் வலுவான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஜெய்சங்கரின் வருகை பாராட்டுக்குரியது. இவ்விஜயம் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் நீடித்த கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும். அதுமாத்திரமன்றி 'ஒப்பரேஷன் சாகர் பந்து' உதவித்திட்டத்தை சரியான தருணத்தில் நடைமுறைப்படுத்தியதன் ஊடாக அவசரநிலைக்கு முகங்கொடுத்திருந்த எமது நாட்டுக்கு முதலில் உதவிய இந்தியாவின் பங்கையும் இது வெளிக்காட்டுகின்றது.
இலங்கை முகங்கொடுத்திருந்த பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், உங்களுக்கும் (ஜெய்சங்கர்) எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் பெற்றோலியத்துக்கான இலகு கடன்கள், இருதரப்பு நாணயப் பரிமாற்றங்கள் மற்றும் கடன் பொறுப்பு ஒத்திவைப்பு என்பன மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
புவியியல் ரீதியில் அண்மைய அமைவிடம், ஆழமான வரலாற்று மற்றும் கலாசார உறவுகள், பரஸ்பர கௌரவம், விரிவடையும் பொருளாதாரத் தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக இருநாடுகளும் நீண்டகாலமாக பன்முகப்படுத்தப்பட்ட நல்லுறவைப் பேணிவருகின்றன.
அந்தவகையில் அவசர நிதியுதவி மற்றும் அந்நிய செலாவணி ஆதரவு உள்ளிட்ட பலதரப்பட்ட உதவிகள் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், ஏற்கனவே உள்ள கடன்களின்கீழ் உறுதிப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்கென வழங்கப்பட்ட 20.66 மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த உதவியையும் நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். அத்தோடு உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவுக்கு இணைத்தலைமை வகிக்கும் நாடாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை உரிய தருணத்தில் முடிவுறுத்துவதற்கு உதவிய இந்தியாவை நாம் மனதார பாராட்டுகின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், கலாநிதி ஜெய்சங்கருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது பொருளாதார மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை பேரனர்த்த காலப்பகுதியில் இந்திய வழங்கிய 1000 தொன்களுக்கும் மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே தாமதமின்றி விநியோகிக்கப்பட்டன. அத்தோடு இந்திய இராணுவத்தினரால் மஹியங்கனையில் நிறுவப்பட்ட கள மருத்துவமனை, சுமார் 10 தொன் அவசர மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டமை, நாட்டுக்கு 4 தொகுதிகளாகக் கொண்டுவரப்பட்ட 228 தொன் 'பெய்லி' பாலத் தொகுதிகள் உள்ளடங்கலாக இந்தியாவினால் வழங்கப்பட்ட சகல உதவிகளுக்கும் இவ்வேளையில் நன்றி கூறுகின்றோம்.
இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள ஆதரவை வழங்கும் வகையில் மேலதிக நிவாரணத் தொகுப்பின் அறிவிப்பை வெளியிடுவதற்கான உத்தேசத்துடன் இடம்பெற்றிருக்கும் ஜெய்சங்கரின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நடவடிக்கையின் மூலம் இந்திய மீண்டும் அதன் வலுவான நட்பையும், ஒற்றுமையையும் நிரூபித்துள்ளது என்றார்.





