பெரும்பான்மையானோர் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கின்றனர்: பேராசிரியர் சிறிமல்
உயிரிழப்புகளைத் தடுக்க மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கை சனத்தொகையில் பெரும்பான்மையானோர் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தான வலயங்களில் வசித்து வருவதாக வறுமை பகுப்பாய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தில் 30-01-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட நகரமயமாக்கல் மற்றும் கைத்தொழில் மயமாக்கல் காரணமாக சனத்தொகையில் சுமார் 78.5 சதவீதமான மக்கள் இன்னமும் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் ஆற்றங்கரை கடற்கரையோரங்கள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் போன்ற சுற்றுச்சூழல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இடங்களிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புகளைத் தடுக்க மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே அதற்கான தகுந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதாவது மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேறுவதை உறுதி செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் அபாயம் மிக்க தொழில்களைச் சார்ந்திருப்பதை குறைத்து, வாழ்வாதார முறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், உள்ளூர் மட்டத்தில் திட்டமிடல்களை மேற்கொள்வதன் மூலம் மக்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்து ஏற்படுவதை குறைக்க முடியும் என்றார்.





