பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 28 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல்
கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் 17-08-2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனை மன்றுக்குத் தெரியப்படுத்தினர்.
தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 250 இலட்சம் ரூபா (25 மில்லியன்) பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 28 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் 17-08-2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனை மன்றுக்குத் தெரியப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், மோசடி இடம்பெற்ற வங்கியின் ஆவணங்களில் கையொப்பமிட்ட நபர்களின் கையெழுத்து தொடர்பான பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக் கோப்புகள் தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய 13 ஆவது மற்றும் 17 ஆவது சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.





