மின்சார தொழிற்சங்க நடவடிக்கை விடப்பட்டது
தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதாக தொழில் ஆணையாளர் வழங்கிய வாக்குறுதிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார தொழிற்சங்கத்தினர் தொழில் ஆணையாளர் மற்றும் புதிய மின்சார நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளனர்.
தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதாக தொழில் ஆணையாளர் வழங்கிய வாக்குறுதிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சாரசபை சேவையாளர்களில் ஒரு தரப்பினர் கடந்த 09 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர மின் இணைப்பு மற்றும் மின்விநியோக தடைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் இருந்து விலகியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விநியோக தடை பதிவாகியுள்ளது.இவ்வாறான பின்னணியில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட மின்சார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் விசேட பேச்சுவார்த்தை நேற்று தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது தொழிற்சங்கத்தினர் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதிய மின்சார நிறுவனங்களில் தலைவர்கள் குறிப்பிட்ட நிலையில் மிகுதி கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வு பெற வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதாக தொழில் ஆணையாளர் வழங்கிய வாக்குறுதிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.





