மூன்று சட்டங்களுக்கு சபாநாயகர் சான்றுரை
2023 ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மட்டும் ஏற்புடையதான பத்து சதவீதத்திலான மொத்தச் சேகரிப்பை மட்டுப்படுத்துவது,
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்த) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு(திருத்த) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்த) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் 18-12-2025அன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இதனை சபைக்கு அறிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்த) சட்டமூலமானது, 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த)சட்டத்தைத் திருத்துவதை பிரதான நோக்காகக் கொண்டதாகும். இச்சட்டமூலம் 09.10.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டமூலத்தின் ஊடாக 2ஆவது வாசகம் திருத்தப்படுகிறது. இதற்கமைய, 2023 ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மட்டும் ஏற்புடையதான பத்து சதவீதத்திலான மொத்தச் சேகரிப்பை மட்டுப்படுத்துவது,
2025 ஒக்டோபர் 01ஆம் திகதியிலிருந்து குதிரைப் பந்தயப்பணயக்காரர் என்ற தொழிலில் அல்லது சூதாட்டத் தொழிலில் ஈடுபடும் ஆட்களிடமிருந்தான மொத்தச்சேகரிப்பு அறவீட்டை 18 சதவீதமாக அதிகரித்தல், இலங்கைப் பிரஜைகளாகவுள்ள ஆட்களிடமிருந்து கெசினோ நுழைவு அறவீடானது நூறு ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் என்பன இத்திருத்தத்தின் நோக்கமாகும்.
அதேநேரம், 14.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்த) சட்டமூலமானது,2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டமூலத்தை திருத்துவதற்கான சட்டமூலமாகும். இத்திருத்தமானது, திட்டங்களை அடையாளம் காணுவதற்கான புதிய நடைமுறையாக அதிகபட்ச விலக்களிப்புக் காலத்தை 25 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகக் குறைத்தல், உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டத்தை ஒரு செயல்நுணுக்க அபிவிருத்திக்கருத்திட்டமாக அடையாளங்காண்பதன்மேல், இலங்கை முதலீட்டுச் சபையானது அத்தகைய கருத்திட்ட உத்தேசத்தை நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வுக்காக நிதியமைச்சுக்கு ஆற்றுப்படுத்துதல்,
அத்தகைய நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வை நிறைவேற்றுதல், இணங்கியொழுகாமையின் போது இச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விலக்களிப்புகள், சலுகைகள் அல்லது வாிவிடுமுறை எவற்றையும் அல்லது எல்லாவற்றையும் மட்டுப்படுத்துதல் அல்லது சம்பந்தமாக ஏற்பட்ட இழப்பை அறவிடுவதற்கு நிருவாகத் தண்டங்களை விதித்தல், வரிச் செலவினங்கள் மீதான வருடாந்த அறிக்கையொன்றினை வெளியிடுவதற்கு நிதி அமைச்சினைத் தேவைப்படுத்துவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல் என்பன இந்தத் திருத்தங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கமைய, குறித்த மூன்று சட்டமூலங்களும் முறையே 2025ஆம் ஆண்டு 24ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாகவும், 2025ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டமாகவும், 2025ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்த) சட்டமாகவும் அமலுக்கு வருகின்றன.





