புத்தர் சிலை விடயத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினையில்லை: கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் தெரிவிப்பு
பொலிஸார் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பாக இந்த இடத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து வணக்கத்திற்குரிய புத்தர்சிலை பலவந்தமாக அகற்றிச்சென்றனர்.
திருகோணமலை கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும், பின்னர் சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் இந்த விடயத்தில் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும்,நேர்மையாகவும் கூறுகின்றேன். இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புணர்வுடனே பழகி வருகின்றனர். ஆனால் பொலிஸாரே மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தை திசை திருப்ப வேண்டாம் என்று கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் கூறினார்.
திருகோணமலை கடற்கரையில் தம்மால் வைக்கப்பட்ட புத்தர் சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்டு அடுத்தநாள் மீளவும் அதே இடத்தில் வைக்கப்பட்ட போது நடந்த விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க 19-11-2025அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே தேரர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில், "திருகோணமலை கடற்கரையில் 1952 ஆம் ஆண்டு முதல் மாவட்டத்தின் முதலாவது தர்ம பாடசாலை இயங்கி வந்தது.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் இங்கிருந்த பாடசாலை கட்டிடம் முற்றாக அழிவடைந்தது.அது பின்னர் புனரமைக்கப்படவில்லை.எனினும் நீண்டகாலமாக இதனை புரனரமைக்க வேண்டுமென விரும்பினோம்.
இந்நிலையில் இம்மாதம் இது தொடர்பில் எமது விகாரையின் நிர்வாக்குழுவின் தீர்மானப்படி அழிவடைந்த கட்டிடத்தை கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் படி சென்ற சனிக்கிழமை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. நாம் எதனையும் மறைவாக செய்யவில்லை.
எனினும் கட்டுமான பணிகள் திருகோணமலை துறைமுக பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டது.எனினும் நாம் திட்டமிட்டபடி புத்தர்சிலையை அங்கு வைத்து வழிபாடுகளை நடத்தினோம். எனினும் பொலிஸார் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பாக இந்த இடத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து வணக்கத்திற்குரிய புத்தர்சிலை பலவந்தமாக அகற்றிச்சென்றனர்.அதனை தடுக்க முயற்சித்த என் மீதும், வணக்கத்திற்குரி காசியப்ப தேரர் மீதும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை விகாரைக்கு திரும்பி உள்ளோம். இப்போது விடயம் நீதிமன்றத்தில் உள்ளது. திருகோணமலை நீதிமன்றம் இது தொடர்பில் இடைக்கால தீர்மானத்தை அறிவித்துள்ளது.
இந்த இடத்தில் மேலதிகமாக எவ்வித கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டாம்.தற்போது உள்ளவை அவ்வாறே இருக்க வேண்டும்.இறுதி தீர்மானம் வழங்கப்படும் வரை இதனை பின்பற்ற வேண்டும் என எமக்கு கூறப்பட்டுள்ளது.எனவே நாங்கள் நீதியை,சட்டத்தை மதிக்கின்றோம். எமக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகின்றோம் என்றார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் மாவட்டத்தின் பிரதான விகாரைகளின் பிரதம பெளத்த பிக்குகள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





