உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ள இந்திய - இலங்கை உறவு: உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா
தித்வா புயலின் போது நாம் எதிர்கொண்டிருந்த சவால்கள் சாட்சியங்களாக காணப்படும் நிலையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அந்த தேவை அதிக அளவில் உணரப்பட்டது.
இந்திய வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான உறவுகள் அயலவர்களுக்கிடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா தெரிவித்தார்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2026அன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இந்திய வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத பிணைப்பானது எமது நாகரீக தொடர்புகள் மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் மேலும் வலுவூட்டப்படுகின்றது. நாம் இன்று நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கின்றோம். இது வெறுமனே எமது தலைவர்கள் இடையில் மட்டுமல்ல எங்களது மக்களிடையிலும் அவை அனுபவிக்கப்படுகின்றமையை காண முடிகின்றது. இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளது.
2025 ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் மற்றும் அதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் ஆகியவை இந்த பங்குடமைக்கான இலட்சிய வழித்தடத்தை உருவாக்கியிருந்தன. பௌதீக, டிஜிட்டல் மற்றும் சக்தி இணைப்புகள் எங்களது பங்குடமையின் முக்கிய காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இலக்குகளாக வளர்ந்துள்ளன.
இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கடந்த வருடம் நாம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம். மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலையை ஒரு வலுசக்தி கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுகள் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பௌதிக உட்கட்டமைப்பினை நவீன மயப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகின்றது. மாஹோ - ஓமந்தை புகையிரத பாதையினை நவீன சமிக்ஞை முறைமையுடன் மேம்படுத்தும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த தசாபத்தத்திலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளும்போது 500 கிலோமீட்டர் ரயில் பாதையினை மீளமைப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகளின் சமிக்கை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதேவேளை காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். விமான சேவைகளை நோக்கும்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமார் 180 வாராந்த விமான சேவைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்துடனான இரண்டாவது பயண இடமாக திருச்சி இணைக்கப்பட்டது.
எமது பங்குடமையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் அமல்படுத்தலுடன் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணம் ஆரம்பமாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையூடாக ஆரம்பிக்க உதவும். நாட்டில் ரொக்கப்பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறைமைகளை கட்டி எழுப்புவதற்கான இலங்கையின் அபிலாசையானது இலங்கையில் யு.பி.ஐ. கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது.
எதிர்காலத்துக்கு தயாரான ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களுக்கான வாய்ப்புகளை கடந்த வருடத்தில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். எமது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு மூலதன நிறுவனங்கள் இலங்கையில் ஒரு நவீன புத்தாக்க கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
அது மட்டுமல்லாமல் எமது சிறந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் நிலையில் சுற்றுலா துறைக்கான பாரிய ஆதாரமாக தொடர்ந்து இந்தியா உள்ளது. அதேபோல கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதிக்கான இரண்டாவது பாரிய இடமாக இந்தியா பதிவாகியுள்ளது. இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளராகவும் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். இந்திய முதலீடுகள் ஓர் அதிகரித்த செல்நெறியினை கொண்டிருக்கும் நிலையில் 2025 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில் சுமார் ஐம்பது வீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும்.
புவியியல் ரீதியாக மிகவும் நெருக்கமான அமைவிடத்தினை நாம் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை நாம் மிகைப்படுத்த முடியாது. எங்கள் அயல்பிராந்தியங்களில் பல்தேசிய குற்றவாளி அமைப்புகள் மற்றும் சட்ட விரோதமான செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணப்படும் ஒத்துழைப்புகளில் இது வெளிப்படையாக உள்ளது. அதேபோல கடல் ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எங்களது கூட்டு நடவடிக்கைகளிலும் இது வெளிப்பட்டுள்ளது.
தித்வா புயலின் போது நாம் எதிர்கொண்டிருந்த சவால்கள் சாட்சியங்களாக காணப்படும் நிலையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அந்த தேவை அதிக அளவில் உணரப்பட்டது. இந்நிலையில் அவற்றுக்கான களங்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஊடாக இலங்கையின் பாதுகாப்பினை வலுவாக்குவதிலும் இது மிக முக்கியமானதாகும். குறிப்பாக பேரிடர் தணிப்பு மற்றும் நிவாரணமும் புனர்வாழ்வும் ஆகியவற்றில் இலங்கையின் திறன்களை கட்டி எழுப்புதல் போன்றவையும் இதில் உள்ளடங்குகின்றன எனத் தெரிவித்தார்.





