கிழக்கு, மத்திய மாகாணங்களில் 100 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்
கடந்த நவம்பர் 21ஆம் திகதியிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 13 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 101 055 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில தினங்களுக்கு நீடிக்கு மென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வழமையான அளவிலேயே காணப்படுகின்றன. எந்தவொரு நீர்த்தேக்கத்திலும் அபாய நிலைமையில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் பதிவாகக் கூடும் மழை வீழ்ச்சியின் அடிப்படையிலேயே வான் கதவுகளை திறப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுமென நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரிய பண்டார தெரிவித்தார்.
இதேவேளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதற்கமைய கண்டி, பதுளை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 25 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 32 பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு ஆரம்ப நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன என்பதற்காக அபாயம் குறைவடைந்துள்ளது என்று கருத முடியாது. மத்திய மலை நாட்டில் பெரும்பாலான மலைகள் உறுதியற்ற நிலைமையிலுள்ளன எனவே விடுக்கப்படும் எச்சரிக்கைகளுக்கமைய அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த நவம்பர் 21ஆம் திகதியிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 13 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 101 055 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 22 096 குடும்பங்களைச் சேர்ந்த 66 132 பேர் தொடர்ந்தும் 723 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 490 385 குடும்பங்களைச் சேர்ந்த 1 702 719 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.





