190 ஆவது உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நாடாக இலங்கை
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் கில்பர்ட் எப். ஹொங்போவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திசாநாயக்க இந்த ஆவணத்தை கையளித்தார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆவது இலக்கத்தைக் கொண்ட வேலைத் தளங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட 55 ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளது. குறித்த உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணத்தை இலங்கை அரசாங்கம் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் கில்பர்ட் எப். ஹொங்போவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திசாநாயக்க இந்த ஆவணத்தை கையளித்தார்.
கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வின் போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் கில்பர்ட் எப். ஹொங்போ கருத்து தெரிவிக்கையில், இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதன் மூலம் தொழிலாளர் சமூகத்தின் கௌரவம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை மீண்டும் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலை சூழலை உருவாக்குவதற்காக இலங்கை எடுத்துள்ள இந்த சிறப்பான நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
மேலும், இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைய சட்டங்கள் மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்புகளை தயார் செய்து கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெ னி வா வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு நபருக்கும் எந்தவித துன்புறுத்தல்களும் அற்ற சூழலில் பணிபுரிவதற்கான உரிமையை மதிக்கவும், மேம்படுத்தவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொண்டமை காட்டுகிறது.
இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக உள்நாட்டில் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும், தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யவும் இலங்கை ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கான சட்ட வரைபுகளை தயார் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆவது இலக்கத்தைக் கொண்ட வேலைத் தளங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிரான உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணம், கடந்த ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில், தொழிலாளர் அமைச்சின் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோனி சிம்ஸனிடம் சடங்குபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆவது உடன்படிக்கையானது, வேலைத் தளங்களில் இடம்பெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் தெளிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அடித்தளத்தை வழங்கும் முதலாவது சர்வதேச சட்டபூர்வ ஆவணமாகும். பால்நிலை ரீதியான வன்முறைகளை ஒழிப்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆவது உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட உலகின் 55 ஆவது உறுப்பு நாடாக இலங்கை மாறியுள்ளதுடன், தெற்காசியாவில் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட இரண்டாவது நாடாகவும் இலங்கை திகழ்கிறது என்றார்.





