தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவுகளுக்கு வட்ஸ்அப் ஊடாக உதவி - டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
பயனாளிகளால் வழங்கப்படும் அனைத்து தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் மத்திய நிலையத்தினால் விசேட வாட்ஸ்அப் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் நிபுணி ராஜபக்ஷ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப அல்லது இதர சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், 076 000 1919 என்ற இலக்கத்தைப் பயன்படுத்தி இந்த உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் தமது வாகன இலக்கத்தை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். வாகன இலக்கத்தைப் புகைப்படமாக அனுப்பக்கூடாது என்பது முக்கியமானது. வாகன இலக்கத்துடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களையும் அதே இலக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.
வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இந்தச் சேவைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவராவார். விண்ணப்பத்தின் போது சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டை இலக்கமானது, வாகனப் பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமையாளரின் இலக்கத்துடன் கட்டாயம் ஒத்துப் போக வேண்டும். பயனாளிகளால் வழங்கப்படும் அனைத்து தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
இத்தரவுகள் தகவல்களை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதுடன், அப்பணிகள் நிறைவடைந்ததும் வாகன இலக்கத்தைத் தவிர ஏனைய அனைத்து தனிப்பட்ட தகவல்களும் கணினிக் கட்டமைப்பிலிருந்து பாதுகாப்பாக நீக்கப்படும்.





