மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு ஆறுமாத காலவகாசம்: ஐக்கிய மக்கள் சக்தி
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆறுமாதம் காலவகாசம் வழங்குவோம்.
அரசாங்கம் நினைத்தால் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பிரேரணையை அடுத்தவாரமே பாராளுமன்றத்துக்கு கொண்டு வரலாம். அரசாங்கத்துக்கு ஆறு மாதம் காலவகாசம் வழங்குகிறோம். முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால்விடுத்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் இயலாமை மற்றும் பலவீனம் தொடர்ச்சியாக வெளிப்பட்ட வண்ணமே உள்ளது.
அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருட காலத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தோல்வியடைந்து விட்டது. அதேபோல் சகல கூட்டுறவு தேர்தல்களிலும் தோல்வியடைந்த நிலையில் உள்ளது. ஆகவே அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை வெறுப்பு மாத்திரமே மிகுதியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆறுமாதம் காலவகாசம் வழங்குவோம். ஆளும் தரப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எதிர்வரும் வாரம் ஒரு பிரேரணையை கொண்டு வந்தால் மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தலாம்.
அரசாங்கத்தால் நாட்டை சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க முடியாது. சிறந்த தரப்பினர் எம் அணியில் உள்ளார்கள். அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். நாட்டை சிறந்த முறையில் நாங்கள் நிர்வகிப்போம். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றிப்பெறும் என்றார்.





