ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் - விஜேதாச
நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு பாரியளவில் செயலிழந்துள்ளது. எமது உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டு 225 வருடங்கள் ஆகின்றன.
நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதி நியமனங்களைப் புறக்கணிப்பதன் மூலம், ஜனாதிபதி தனது சத்தியப்பிரமாண உறுதிமொழியை மீறி, திட்டமிட்ட முறையில் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் விஜேதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் 02-06-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு பாரியளவில் செயலிழந்துள்ளது. எமது உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டு 225 வருடங்கள் ஆகின்றன. இந்த 225 வருட வரலாற்றிலும் என்றுமே நடக்காத ஒரு விடயம்தான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. இன்று உயர் நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகளுக்கான இடங்கள் வெற்றிடமாக உள்ளன. நீதிமன்றங்களில் வழக்குகள் குவியலாகக் தேங்கிக் கிடக்கின்றன.
உயர் நீதிமன்றத்தில் நான்கு வெற்றிடங்கள் என்பது ஒரு பெரிய தொகையாகும். மொத்தமாகவே அங்கு இருப்பது சில நீதிபதிகள்தான். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மொத்தம் 20 பேர்தான் இருக்கிறார்கள். இப்போது எமது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றங்கள் இரண்டிலும் நான்கு வெற்றிடங்கள் நிலவும் போது, மக்களுக்குக் காலத்தேவையின்படி நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அப்படி ஒரு விடயத்தை எதிர்பார்க்கவே முடியாது.
கடந்த 225 வருடங்களில் இல்லாதவாறு, அண்மைக்காலமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற நீதிபதிகள் பலர், சுமார் 28 வருடங்கள், 32 வருடங்கள், 34 வருடங்கள் என நீண்ட காலம் நீதிச் சேவையில் பணியாற்றியவர்கள் ஆவர். தமக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ அல்லது உயர் நீதிமன்றத்திற்கோ செல்வதற்கான தகுதி கண்முன்னே தெரிந்தும், அங்கு வெற்றிடங்கள் இருப்பதை அறிந்திருந்தும், இந்த நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்காமல் அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்ன? இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை என்பதுதான். நீதிபதிகளுக்குப் பதவி உயர்வுகளை வழங்க அரசாங்கம் விரும்பவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்? அரசியலமைப்பின் கீழ் நாட்டில் எடுக்கப்பட வேண்டிய அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், நடைமுறையிலுள்ள சட்டத்தை நிலைநாட்டுவதற்கும் ஜனாதிபதிக்குத் தெளிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி ஒரு சத்தியப்பிரமாண உறுதிமொழியையும் வழங்கியுள்ளார்.
ஆனால், அவர் வழங்கிய அந்த உறுதிமொழி இந்த தற்போதைய காலகட்டத்திற்குள் மீறப்பட்டுவிட்டது. நாட்டின் சாதாரண ஒரு நிர்வாக நிறுவனம் தொடர்பாக அல்ல, நாட்டின் உன்னதமான உச்சநீதிமன்றங்கள் இரண்டினதும் நீதிபதிகளை நியமிப்பதனைப் புறக்கணிப்பதானது, அரசியலமைப்பின் 107 ஆவது பிரிவின் கீழ் திட்டமிட்டு அரசியலமைப்பை மீறும் ஒரு செயலாகும். ஒரு ஜனாதிபதி திட்டமிட்டு அரசியலமைப்பை மீறினால், அதற்கடுத்ததாக வர வேண்டிய விளைவு என்னவென்றால், அந்த ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என்றார்.





