இலக்கை விஞ்சிய சுங்க வருமானம் மோட்டார் வாகன இறக்குமதிகள் சரிவு - சுங்க பேச்சாளர் தகவல்
அரசாங்கம் மேலதிக வரியை விதித்த ஆரம்ப நாட்களில் இந்தக் குறைவு உடனடியாகத் தெரியவில்லை. ஏனெனில், அதற்கு முன்னர் கடன் கடிதங்களைத் திறந்தவர்களுக்கு இந்த வரி விதிப்புப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் சுங்கத் திணைக்களம் தனது வருமான இலக்கைத் தாண்டி 313 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகச் சிரேஷ்ட சுங்க பணிப்பாளரும் சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய மேலதிக வரி காரணமாக நாட்டில் மோட்டார் வாகன இறக்குமதிகள் மற்றும் அது சார்ந்த சுங்க வருமானங்கள் தற்போது வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த வருடத்திற்காக சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 2206 பில்லியன் ரூபாவாகும். இதில் முதல் ஆறு மாதங்கள் (ஜூன் 30 ஆம் திகதி வரை) நிறைவடைந்துள்ளன. ஜூன் 30 ஆம் திகதி வரையிலான சுங்கத்தின் வருமான இலக்கு 1060.5 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், அந்தத் திகதிக்குள் சுங்கத் திணைக்களம் 1373.7 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 313 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை மாதத்திற்கான வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபாவாகும். அதில் முதல் இரண்டு நாட்களிலேயே 31 பில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. கடந்த வருடம் சுங்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக 2.5 டிரில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டிருந்தது. தற்போதைய போக்கின்படி, இந்த வருடத்திலும் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கைத் தாண்டி கடந்த வருட சாதனையை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொதுவாக சுங்க வருமானத்தில் மோட்டார் வாகன இறக்குமதி மூலமான வருமானம் முக்கியமாகப் பேசப்படுகிறது. ஜூலை மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் ஈட்டப்பட்ட 31 பில்லியன் ரூபாவில், இரண்டாம் திகதியன்று மட்டும் கிடைத்த மொத்த வருமானம் 12 பில்லியன் ரூபாவாகும். அந்த 12 பில்லியனில் 3 பில்லியன் ரூபா மோட்டார் வாகனங்கள் மூலமும், ஏனைய 9 பில்லியன் மற்றைய இறக்குமதிகள் மூலமும் கிடைத்துள்ளது.
கடந்த வருடங்களில் மோட்டார் வாகனங்கள் மூலமான பங்களிப்பு 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அல்லது அதற்கும் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது மோட்டார் வாகனங்கள் மூலமான வருமானத்தில் ஓரளவுக்குக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மோட்டார் வாகனங்கள் மீது மேலதிக வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிக்கப்படுவதற்கு முன்னர் கடன் கடிதங்களை திறந்தவர்களின் வாகனங்களே தற்போது பெரும்பாலும் நாட்டுக்குள் வந்துகொண்டிருக்கின்றன.
மேலதிக வரி விதிப்பிற்குப் பின்னர் கடன் கடிதங்களைத் திறந்து இறக்குமதி செய்யப்படுபவை என்றால், அவை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் வாகனங்களாகவே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வாகன இறக்குமதியில் ஒரு குறைவு காணப்படுகிறது.
அரசாங்கம் மேலதிக வரியை விதித்த ஆரம்ப நாட்களில் இந்தக் குறைவு உடனடியாகத் தெரியவில்லை. ஏனெனில், அதற்கு முன்னர் கடன் கடிதங்களைத் திறந்தவர்களுக்கு இந்த வரி விதிப்புப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடன் கடிதங்களை ஏற்கனவே திறந்திருந்தவர்கள் மேலதிக வரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததுடன், அவர்களுக்கு அந்த வரி தாக்கத்தை ஏற்படுத்தாததால் ஆரம்பத்தில் இறக்குமதி குறையவில்லை. ஆனால், தற்போது அந்த இறக்குமதிக் குறைவை தெளிவாக அவதானிக்க முடிகிறது என்றார்.





