ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி சந்திப்பு
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் 24-03-2026அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டுக்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியை, 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு உடனடியாக வழங்குவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகக் கருதுகிறேன்.
அதேபோல், 'டித்வா' அனர்த்த நிலையின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக இதன்போது குறிப்பிட்டதுடன், அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை வழங்கிய உதவிகளையும் இலங்கையுடனான விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்பையும் பாராட்டினேன்.
அனர்த்தத்திற்கு பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் இதன்போது பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, 'டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டமொன்றிற்கு ஆதரவளிப்பதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்தது.





