ரோஹித ராஜபக்ஷவிடம் ஐந்து மணிநேரம் விசாரணை
பொலிஸாரின் தகவல்படி, 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷவிடம் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நேற்று காலை 9:45 மணியளவில் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்த ராஜபக்ஷ, விசாரணை அதிகாரிகளிடம் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர், பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஹான பகுதியில் உள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்கே அவர் அழைக்கப்பட்டிருந்தார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்படி, 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெளிவான வருமான வழிமுறை எதுவும் இன்றி, இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால், இந்த நிதியின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





