அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்தது ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கே அன்றி அழிப்பதற்கு அல்ல: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை ஜனநாயக வழியில் தோற்கடிப்போம்.
முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது ஜனநாயக முறையையே சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உயர்நீதிமன்றங்களில் வெற்றிடமாக உள்ள பதவிகளை நிரப்ப தவறியுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட கூற்றொன்றை 29-07-2026 அன்று முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் உள்ள நீதிபதிகள் இந்த வெற்றிடங்களை நிரப்பத் தகுதியற்றவர்களா என்று அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றோம். இந்த வெற்றிடங்களை நிரப்புவதை நிறுத்தியுள்ளமை போலவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்து, இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறானதொரு நடவடிக்கைக்கு அரசாங்கம் ஏன் முற்படுகிறது?
அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்தது ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கே என்றாலும், அரசாங்கம் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, சர்வாதிகார ஆட்சி முறைமையையும் ஒரே கட்சி முழு நாட்டையும் ஆளும் கொள்கையையுமே பின்பற்றி வருகிறது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை இலஞ்சமாகக் கொடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு ஆதரவைப் பெற்றதாக ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைக் குழுவின் சட்டத்தரணி விஜேநாயக்க கூட அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், சாலிய பீரிஸ் போன்ற சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அரசாங்கத்தின் யோசனையை நிராகரித்திருப்பதும் ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கைக்கு இணங்கவா?
இனியாவது பொய்களினாலும் ஏமாற்று வித்தைகளினாலும் நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். அரசாங்கம் பொய் கூறுகிறது என்பது தற்போது பகிரங்கமாகிவிட்டதால், இனியாவது ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை ஜனநாயக வழியில் தோற்கடிப்போம்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் செய்யக்கூடிய அதிகபட்சப் பணிகளை ஆற்ற அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மேலும், சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இனியாவது 'வளமார்ந்த நாடு - அழகான வாழ்வு' கொள்கை அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.





