தனியார் வங்கி முகாமையாளர் நால்வருக்கும் செப்டம்பர் 3வரையில் விளக்கமறியல் நீடிப்பு
இதில் ஒரு தனியார் வங்கியின் கிளை முகாமையாளராகப் பணியாற்றிய சந்தேகநபர் ஒருவர், சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியாகப் பரிமாற்றம் செய்ய உதவியுள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இலங்கையிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி முகாமையாளர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி தகவல்களை சமர்ப்பித்து, பொருட்கள் இறக்குமதிக்காகவே நிதியனுப்பப்படுவதாகக் கூறி, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் மன்றில் தெரிவித்தனர்.
இதில் ஒரு தனியார் வங்கியின் கிளை முகாமையாளராகப் பணியாற்றிய சந்தேகநபர் ஒருவர், சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியாகப் பரிமாற்றம் செய்ய உதவியுள்ளார்.
மேலும், மற்றொரு தனியார் வங்கியின் விற்பனை ஊக்குவிப்பு முகாமையாளர் 25 தந்திப் பரிமாற்றங்கள் மூலம் 647,207 அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, மற்றொரு தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி 1,067 மின்னணு நிதிப் பரிமாற்றங்களை மேற்கொண்டு, சுமார் 24.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.
இது தவிர, கைது செய்யப்பட்ட மற்றொரு நிறைவேற்று அதிகாரி 943 மின்னணு நிதி பரிமாற்றங்கள் மூலம் சுமார் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வழிவகுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை மீறி செயற்பட்டுள்ள இச்சந்தேகநபர்கள், இந்த சட்டவிரோதப் பரிமாற்றங்களுக்கு உதவி செய்ததற்காகப் பணப் பலன்களைப் பெற்றிருக்கலாம் என இதுவரை கண்டறியப்பட்ட தகவல்கள் குறிப்பிடுவதாகப் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இந்த நிதியனுப்பல்களை செய்வதற்காக சுங்க ஆவணங்கள் மற்றும் பிற துணை சான்றுகள் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





