கிரிஷ் கொடுக்கல் வாங்கல் 4 ஆவது பிரதிவாதியாக நாமல்
ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் 4 ஆவது பிரதிவாதியாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த நகர்த்தல் பத்திரம் 28-09-2026 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரக அவ்வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை கூட்டு அபிவிருத்தித் திட்டத்துக்காக 'கிரிஷ் டிரான்ஸ்வேர்க் தனியார் நிறுவனத்துக்கு' வழங்குவதற்கான பணிகளை விரைவாக முடித்துத் தருவதற்காக, அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வழக்கிலேயே இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் நாமல் ராஜபக்ஷ பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.





