பிராண்டனில் சில குடும்பங்களுக்குக் குறைந்த செலவிலான, அணுகுவதற்கு ஏற்ற வீடுகள் எட்டாக்கனி
பிராண்டன் நகரில் வீடுகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
தென்மேற்கு மானிட்டோபா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான பிராண்டனில், சில குடும்பங்கள் தங்களுக்கெனச் சொந்தமாக குடியிருக்க ஏற்ற, குறைந்த செலவிலான வீட்டை கண்டுபிடிக்கப் போராடி வருகின்றன.
பிராண்டன் நகரில் வீடுகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. தற்போதைய தேவைகளின் அடிப்படையில், 54,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில் சுமார் 1,300 வீடுகள் குறைவாக இருப்பதாகக் கனடாவின் வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை தெரிவிக்கிறது. அதேவேளையில், காலியாக உள்ள வீடுகளின் விகிதம் 1.9 விழுக்காடாக மட்டுமே உள்ளது.
பிராண்டன் நகரின் வீடற்ற தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான தகவல் அமைப்பு என்ற மத்திய அரசின் தரவுத்தளத்தின்படி, குடும்பங்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பிராண்டனில் வீடற்ற நிலையை எதிர்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.





