தமிழரசுக்கட்சியின் எம்.பிக்களை ஜனாதிபதி நாளை சந்திப்பார்
நாளையதினம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றை பெறும் நோக்கில் பேச்சுக்களை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து நாளையதினம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, சிறிதரன் அனுப்பிய கடிகதத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் அவசரமாகத் தங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட விரும்புகின்றோம்.
இதனை ஒரு அவசர சந்திப்பாகக்கருதி பாராளுமன்ற அமர்வு நாட்களில் தங்களை நேரடியாகச் சந்தித்து உரையாட வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
குறித்த உரையாடலில் காணி உரிமை சார்ந்து யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு (வசாவிளான், பலாலி, மயிலிட்டி, தையிட்டி) , வவுனியா - கீழ் மல்வத்து ஓயா சிங்களக் குடியேற்றம் முல்லைத்தீவு - கேப்பாபுலவு மட்டக்களப்பு - மயிலத்தமடு மற்றும் மாதவனை ஆகியன தொடர்பிலும், தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் வெடுக்குநாறி மலை மற்றும் குருந்தூர் மலை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சிவ வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வாழ்விடங்களில் மேற்கொள்ளப்படும் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பிலும், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு விடயங்கள் தொடர்பிலும், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





