அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுக - கடற்றொழில் திணைக்களம்
கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பான கடல் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகுகளுக்கும் அதிலுள்ள பணியாளர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.
அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய அபாயம் நிலவுவதால்,அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து பலநாள் மீன்பிடிப் படகுகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மேலும் தெரிவித்துள்ளதாவது: குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் படிப்படியாக வலுவடைந்து இந்தியாவை நோக்கி நகர்ந்து,இந்தியத் தரைப்பரப்பை அடையும் நிலை காணப்படுவதாகவும்இ இதன் தாக்கம் முழுமையாக தணிவடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனையடுத்து, அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் பலநாள் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு,குறித்த பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறி கரையை நோக்கியோ அல்லது வேறு பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்லுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இவர்கள் குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்திலிருந்து விரைவாக விலகிச் செல்வதற்காக இலங்கையை நோக்கி (தெற்கு திசையில்) பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
எனினும், குறித்த பிரதேசத்தில் இன்னும் சில பலநாள் மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும்,அவ்வாறு தொடர்ந்தும் கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பான கடல் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகுகளுக்கும் அதிலுள்ள பணியாளர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.
இதனிடையே,குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் உணரப்படக்கூடிய வாய்ப்புள்ளதால்இ சிறிய அளவிலான கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அந்தந்த நாளில் நிலவும் கடல் நிலைமை மற்றும் காற்றின் வேகத்தை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
தற்போது நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலுக்குத் தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.எனினும் நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிவித்தல்களுக்கு அமைவாக கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.
எனவே, அனைத்து மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வெளியிடும் வானிலை அறிவித்தல்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அவதானமாகப் பின்பற்றி, கடற்றொழிலுக்குச் செல்வதா அல்லது தவிர்ப்பதா என்பதை நிலவும் கடல் நிலைமைக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.
அத்துடன்,கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் செல்லும் போதும், கடற்றொழிலில் ஈடுபடும் போதும்இ மீண்டும் கரைக்குத் திரும்பும் போதும் உயிர்காப்பு அங்கிகளை கட்டாயமாக அணிந்து கொள்ளுமாறும் மீனவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





