ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நியூயோர்க் பயணம்
உள்நாட்டு பொறிமுறையை நாம் நடைமுறைப்படுத்துவோம். அதன் காரணமாகவே பயங்கரவாத ஒழிப்பு சட்டம் இரத்து செய்யப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி நியூயோர்க்கிற்கு விஜயம் செய்யவுள்ளேன். 28ஆம் திகதி அமர்வில் அங்கு இலங்கை சார்பில் உரை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதான நோக்கத்துடன் தம்மால் இணங்க முடியாது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்த இரு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் வரவேற்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நான் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் பங்கேற்றிருக்கின்றேன். அரசாங்கம் என்ற ரீதியில் எமது நிலைப்பாடுகளையும் அறிவித்திருக்கின்றோம்.
இம்முறை எழுத்து மூல அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு 5 நிமிடம் நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்க, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அங்கு அறிவிப்பார். இது ஒரு பொது அமர்வு என்பதால் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நான் பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எவ்வாறிருப்பினும் நியூயோர்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி நான் நாட்டிலிருந்து புறப்படவுள்ளேன். 28ஆம் திகதி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொது சபையில் உரை நிகழ்த்தவுள்ளேன். கடந்த ஆண்டு இந்த அமர்வில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பிரேரணையின் பிரதான நோக்கத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை மிகத் தெளிவாக கடந்த முறையும் தெரிவித்திருந்தோம். இப்போதும் தெரிவித்துக் கொள்கின்றோம். அந்த வகையில் எமது எதிர்ப்பினையும் நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
அதேபோன்று உள்நாட்டு பொறிமுறையை நாம் நடைமுறைப்படுத்துவோம். அதன் காரணமாகவே பயங்கரவாத ஒழிப்பு சட்டம் இரத்து செய்யப்படுகிறது. இதன் ஊடாகவே காணி விடுவிப்புக்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. காணாமல் போனோர் தொடர்பான செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தேசிய பொறிமுறையில் நியாயம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.





