செம்மணி மனிதப்புதைகுழி 491 எலும்புக்கூடுகள் அடையாளம்
489 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 44ஆம் நாள் அகழ்வு நடவடிக்கைகள் 05-08-2026 அன்று முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வின் போது புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதனுடன், செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட மூன்று கட்ட அகழ்வுகளிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 491 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 489 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள சிதுப்பாத்தி இந்து மயானப் பகுதியில், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில் திறந்த நீதிமன்ற அமர்வாக நிர்வாக ரீதியிலான கலந்துரையாடல் நடைபெற்றது. அகழ்வு நடவடிக்கைகளும் அதனுடன் தொடர்புடைய பணிகளும் எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் மற்றும் முறைப்பாட்டாளர் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமர்வின் போது பேராசிரியர் ராஜ் சோமதேவ, தனது சார்பிலும் சட்ட வைத்திய அதிகாரியின் சார்பிலும் அகழ்வுப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, கடந்த வருடம் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அகழ்வின்போது GPR (Ground Penetrating Radar) ஸ்கேனர் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முழுமையான அறிக்கையை விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுடன்
ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், இதுவரை அகழ்வுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து சான்றுப் பொருட்கள் மற்றும் பிற தடயப் பொருட்கள் தொடர்பான முழுமையான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இணக்கம் எட்டப்பட்டது.
இந்த இரண்டு அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் கால நிர்ணயத்தை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. இதற்கான மேலதிக நீதிமன்ற கலந்துரையாடல் அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பல்வேறு சமர்ப்பணங்களையும் நீதிமன்றத்தில் முன்வைத்தனர். குறிப்பாக, விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதுவரை அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக தடயவியல் பொலிஸார், தொல்லியல் அகழ்வுக் குழு மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து ஒளிப்படங்களும் நீதிமன்ற வழக்குக் கோப்பில் இணைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் சான்றுப் பொருட்களின் நீதிமன்றக் கட்டுக்காவல் தொடர்பான நடைமுறைகள் தொடர்ச்சியாக முழுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளும் வழக்கேட்டின் ஒரு பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த சமர்ப்பணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் நான்காம் கட்ட அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பான தீர்மானம், மூன்றாம் கட்ட அகழ்வின் இறுதி வார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாம் கட்டத்தின் இறுதி வார அகழ்வின் போது நான்காம் கட்ட அகழ்வை முன்னெடுப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படலாம் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.
தற்போது மூன்றாம் கட்ட அகழ்வு திட்டமிடப்பட்ட காலஅட்டவணையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் தடயவியல், சட்ட வைத்திய மற்றும் தொல்லியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





