கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் நீடிக்கப்படுவது குறித்து தீர்மானமில்லை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
திட்டமிட்டபடி மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய முழுமையான மூன்று மாதங்களுக்கும் இந்த நிவாரணத்தை தடையின்றி வழங்குவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் முறையாக ஒதுக்கியுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கான மானியக்காலத்தை மேலும் நீடிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை என்று கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நெருக்கடி நிலைமையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கான எரிபொருள் மானியத் திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, கடற்றொழில் துறைக்கு நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் மே 20 ஆம் திகதி முதல் இந்த எரிபொருள் நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சாதாரண டீசல் ஒரு லீற்றருக்கு 100 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்கு 20 ரூபாவும் மானியமாக வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், சுப்பர் டீசல் மற்றும் சுப்பர் பெற்றோல் ஆகியன சந்தை விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதேவேளை, கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மற்றும் மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தும் ஒருநாள் படகுகளுக்கு மேலதிகமாக லீற்றருக்கு 50 ரூபா மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கடற்றொழில் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட 37,500 ஒருநாள் மீன்பிடிப் படகுகள் இந்த 50 ரூபா கூடுதல் மானியத்தைப் பெற தகுதி பெற்றிருந்தன.
இதன்படி, ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 லீற்றர் வீதம், மாதத்திற்கு 25 நாட்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு படகின் உரிமையாளர் மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 31,250 ரூபா நிதியுதவியை மூன்று மாதங்களுக்கு நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டனர்.
இதுதவிர, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் 5,500 பதிவுசெய்யப்பட்ட படகுகளுக்கு தலா 150,000 ரூபா வீதம் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
இந்த தற்காலிக நிதியுதவித் திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக பரவி தகவல்கள் உறுதியானவை அல்ல. திட்டமிட்டபடி மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய முழுமையான மூன்று மாதங்களுக்கும் இந்த நிவாரணத்தை தடையின்றி வழங்குவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் முறையாக ஒதுக்கியுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலவும் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காரணமாக, அடுத்த மாதத்தில் எரிபொருள் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பதை தற்போதைக்கு துல்லியமாக கணிக்க முடியாதுள்ளது. இந்த மூன்று மாத தற்காலிக கால அவகாசம் முடிந்த பின்னர், அப்போதைய உலக சந்தை எரிபொருள் விலையை உன்னிப்பாக ஆராய்ந்தே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் என்றார்.





