சிறை கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு - பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிப்பு
பல்வேறு குறைபாடுகளைத் தவிர்த்து, சர்வதேச தரத்திற்கு அமையக்கூடிய சிறைச்சாலை அமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களுக்கு அமைவாகவே இந்த குழு நியமிக்கப்பட்டது.
சிறை கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவதற்காக முறையான, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட வழிமுறையொன்றை தயாரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, நீதி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவதற்காக முறையான, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட வழிமுறையொன்றை தயாரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) எஸ்.துரைராஜா , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேனவிடம் நேற்று முன்தினம் நீதி அமைச்சில் வைத்து அறிக்கயை கையளித்தார்.
அரசியலமைப்பின் 34 (1) ஆம் உறுப்புரையின் இடைக்கால நிபந்தனை உட்பட ஏனைய சட்டக் கட்டளைச் சட்டங்கள் மற்றும் தீர்ப்புக்களை ஆய்வு செய்து, சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் நிர்வாக நடைமுறைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அசங்க கரவிட்ட ,மறுவாழ்வுப் பணியகத்தின் தலைவி பேராசிரியர் வசந்தா சுபசிங்க,விசேட வைத்திய நிபுணர் சித்தஹாரி அபேநாயக்க, முன்னாள் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் பிரசாத் ஹேமந்த குமார, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரொஷானி ஹெட்டிகே,நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சந்திமா வெலிகல ஆகியோர் பதவி வகித்தனர்.
சிறைச்சாலைகளில் தற்போது காணப்படும் அதிக நெரிசலைக் குறைப்பதற்கும், கைதிகளை மறுவாழ்வுக்கு உட்படுத்தும் வழிமுறைகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளைத் தவிர்த்து, சர்வதேச தரத்திற்கு அமையக்கூடிய சிறைச்சாலை அமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களுக்கு அமைவாகவே இந்த குழு நியமிக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளை பரிசீலித்து பொருத்தமான முறையில் செயல்படுத்துவதை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வரும் காலத்தில் மேற்கொள்ளவுள்ளது.





