கம்மன்பிலவின் நூல் தொடர்பில் எம்மால் இனங்க முடியாது - ரஞ்சித் மத்தும பண்டார
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டது வெறும் அழைப்பின் பேரில்தானே தவிர, அந்த நூலின் உள்ளடக்கத்தை ஏற்றுக்கொண்டு அல்ல. அதன் உள்ளடக்கங்களை அனைத்தையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் 02-04-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் கூறிய விடயங்கள் அனைத்துக்கும் முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமது ஆட்சியில் ஒரு அரிசி கூட இறக்குமதி செய்யப்பட மாட்டாது என உறுதியளித்தவர்கள், இன்று பல மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வருமானம் தேசிய உற்பத்தி வருமானத்தில் பலமடங்காக வீழ்ச்சியடைந்துள்ளது.
தேசிய உற்பத்தி வருமானத்தில் விவசாயிகளின் பங்களிப்பு வெறும் 7 சதவீதம் மாத்திரமேயாகும். விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திடம் எந்த துறை தொடர்பிலும் முறையான திட்டமிடல் இன்மையால் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
மக்கள் இவ்வாறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தாத அரசாங்கம், வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியை பாதுகாப்பத்திலேயே முனைப்பாகவுள்ளது. முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே, எதிர்க்கட்சி தலைவர் உட்பட நாம் அந்நிகழ்வில் கலந்து கொண்டோம்.
மாறாக அந்த நூலில் உள்ளடங்கியுள்ள காரணிகள் என்ன என்பதை அறிந்து கொண்டு அதில் பங்கேற்கவில்லை. அன்றைய தினமே அதன் உள்ளடக்கங்களையும் நாம் தெரிந்து கொண்டோம். எவ்வாறிருப்பினும் அதில் கூறப்பட்டுள்ள அனைத்து காரணிகளுடனும் எம்மால் இனங்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இருந்த எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனால் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவற்றால் பயன்பெற்ற குழு எது? இதற்கான பதிலை வழங்குவதாகக் கூறியே அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியை ஏற்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறினார். ஆனால் எந்த உண்மையும் வெளிப்படுத்தப்படவில்லை.
இது குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளையும், வெளிப்படுத்தல்களையும் எழுத்துபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளித்துள்ளார். இது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருக்கின்றோம். இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரி யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி ஸ்திரமாகவுள்ளது என்றார்.





