புதிய அரசியலமைப்பை கொண்டுவராமல் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியாது: அமைச்சர் ஹர்ஷன
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அடிப்படை எண்ணக்கருப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவராமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இயலாதென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும் நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் விதிகளால் தடைப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காகவே பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனை கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் இந்த தெரிவுக்குழு சபாநாயகரால் வெகுவிரைவில் நியமிக்கப்படும்.
தெரிவுக்குழுவின் அறிக்கை 03 மாத காலத்துக்குள் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல் தொடர்பில் ஆராயப்படும். தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்ற முரண்பாட்டுக்கு முதலில் தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு பொறுத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரிப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்த மாதத்துக்குள் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.
புதிய யாப்புறுவாக்க வரைவினை பொதுமக்களிடம் சமர்ப்பித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர், தேவையான மாற்றங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அதன் அடிப்படை எண்ணக்கருப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போதே முன்னெடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவராமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இயலாது.
இந்த முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான குறிப்பிட்ட கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.





