ரணில் 22 மாதங்களில் 24 வெளிநாட்டு பயணங்கள்
22 மாதங்களில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 24 வெளிநாட்டு பயணங்களுக்காக 385 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது 22 மாதங்களில் 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக மொத்தமாக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஒரு வருட காலத்தில் மேற்கொண்ட 8 வெளிநாட்டு பயணங்களுக்காக 14.9 மில்லியன் ரூபா மாத்திரமே செலவாகியுள்ளது என்று ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுசனிக்கிழமை நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், 2000ஆம் ஆண்டுக்கு பின்னரான அரசாங்கங்களில் முதல் ஒரு வருடத்தில் அதிகளவான சட்டமூலங்களை எமது அரசாங்கமே நிறைவேற்றியுள்ளது. 22 சட்டமூலங்களை இவ்வாறு நாங்கள் இதுவரையில் நிறைவேற்றியுள்ளோம். சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான விடயத்தில் அந்த ஆணைக்குழுக்களை மேம்படுத்துவது தொடர்பில் எவரும் கதைப்பதில்லை.
சுயாதீன ஆணைக்குழுக்கள் சகல அரசியல் குழுக்களினால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசியல் மாற்றங்களின் போதும், மக்கள் ஆணைகள் புதுப்பிக்கப்படும் போதும் அந்த ஆணைக்குழுக்களின் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும். நாடு வேகமாக பயணிக்க முயற்சிக்கும் போது அதற்கு உதவக்கூடியவாறே ஆணைக்குழுக்கள் அமைந்திருக்க வேண்டும்.
சிறிய குழுக்களின் தேவைகளுக்காக செயற்பட்டால் எங்களால் முன்னால் போக முடியாது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அவதானம் செலுத்தி அந்த ஆணைக்குழுகள் அமைய வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதியின் செலவீனங்கள் தொடர்பில் கூறும் போது, அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்த பின்னர் வாகனங்கள் வேண்டும். பாதுகாப்பு வேண்டும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அரசாங்கத்தின் பக்கத்திலேயே கூறப்படும். ஆனால் எங்களின் அரசாங்கம் அவற்றை குறைக்க வேண்டும் என்று கூறும் போது, எதிர்க்கட்சியினரே அவற்றை கேட்கின்றனர்.
அநுரகுமாரவுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு 39 ஆலோசகர்கள் இருந்தனர். அவர்களுக்கு அரசாங்கமே செலவு செய்தது. ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு ஐந்து ஆலோசகர்கள் இருந்தாலும் அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சம்பளம் இன்றியே பணியாற்றுகின்றனர். அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் மேலும் பல செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களின் போது பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது. அந்த செலவுகள் தற்போதைய ஜனாதிபதியினால் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரணில் விக்கிரமசிங்க 2022இல் நான்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது 64 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதற்காக 129.31 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. 2023இல் 16 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதன்போது 269 பேர் சென்றுள்ளனர். இதற்காக 577.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2024இல் 5 பயணங்கயை மேற்கொண்டுள்ளதுடன் இதன்போது 115 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக 300 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. 22 மாதங்களில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 24 வெளிநாட்டு பயணங்களுக்காக 385 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார 2024 டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 செப்டெம்பர் மாதம் வரையில் 8 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவற்றுக்காக 14.9 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது என்றார்.





