மின் துண்டிப்பு ஏற்படுமாயின் அதற்கு எரிபொருள் காரணமல்ல - ஹரின் பெர்ணான்டோ
அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்து, அது அரசாங்கத்துக்கே பாதிப்பாக மாறியுள்ளது.
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு ஏற்படுமாக இருந்தால், அது எரிபொருள் பிரச்சினையால் ஏற்படுவதல்ல. மாறாக அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியால் ஏற்படுவதாகும். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் 18-03-2026 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்து, அது அரசாங்கத்துக்கே பாதிப்பாக மாறியுள்ளது. அனரத்த நிலைமைகளின்போது நிவாரண தொகையை அறிவித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் நகைச்சுவைக்கு உள்ளாகி இருந்தது. தற்போது எரிபொருள் பிரச்சினைக்கு கியூஆர் முறையை அறிமுகப்படுத்தி, செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் கியூஆர் 2023ல் எமது அரசாங்கத்தில் எரிசக்தி அமைச்சராக இருந்த காஞ்ன விஜேசேகரவினால் அறிமுகப்படுத்தியதாகும். அந்த கியூஆரை தற்போதைய காலத்துக்கு ஏற்றவகையில் புதுப்பிக்காமல் அப்படியே பிரதியிட்டே இவர்கள் வழங்கி இருகிறார்கள். அதனாலே அந்த முறைமை தற்போது பிரச்சினையாகி இருக்கிறது.
எரிபொருள் வரிசையை குறைப்பதற்கே அன்று நாங்கள் கியூஆர் முறையை அறிமுகப்படுத்தினோம், அதன் பின்னர் அன்று எரிபொருளுக்கான வரிசை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது கியூஆர் முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி பின்னரே எரிபொருளுக்கான வரிசை அதிகரித்துள்ளது. கியூ.ஆர் முறையில் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டே வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில் எவ்வாறு நாளுக்கு நாள் வரிசை நீல முடியும்?
எரிசக்தி அமைச்சில் இருக்கும் சிறந்த அனுபவமுள்ளவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் இதனையும் பெலவத்தை காரியாலயத்தில் தயாரித்து அறிமுகப்படுத்த நினைத்ததாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு என தெரிவித்து எதிர்வரும் காலங்களில் நாட்டில் மிண் துண்டிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் எரிபொருள் தட்டுப்பாடு அல்ல. அரசாங்கம் இறக்குமதி செய்த 13 கப்பல் நிலக்கரியும் தரம் குறைந்தவை. அதனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படும் டீசல் மின்சார உற்பத்திக்காக அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது என்றார்.





