மாகாணசபைகள் இயங்கவேண்டியதன் அவசியம் குறித்து ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் தமிழ்ப்பிரதிநிதிகள் எடுத்துரைப்பு
தமிழ்த்தரப்புக்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் கரிசனை வெளியிட்டனர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பொதுவான விடயங்கள் சார்ந்து தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், உரிய அரசியல் பிரதிநிதித்துவமின்றி வெறுமனே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவது மாத்திரம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனவும் எடுத்துரைத்துள்ளனர்.
கடந்த வாரத்தொடக்கத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ், அங்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு தமிழ்த்தேசியக் கட்சிகளினதும் பிரதிநிதிகளுடன் தனித்தனி சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
அச்சந்திப்புக்களின்போது தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடத்துக்குள் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், இன்னமும் அதனை நடத்தாமல் தொடர்ந்து தாமதித்து வருவதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், குறிப்பாக வடமாகாணசபை இயங்கவேண்டியதன் அவசியம் பற்றியும், உரிய அரசியல் பிரதிநிதித்துவமின்றி வெறுமனே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவது மாத்திரம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனவும் எடுத்துரைத்தனர்.
அதேபோன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், புதிய அரசியலமைப்பு வரைவில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உள்வாங்குதல் குறித்து தமிழ்த்தரப்புக்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் கரிசனை வெளியிட்டனர்.
அத்தோடு பயங்கரவாதத்டைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இப்போது அதனைப் பதிலீடு செய்யும் வகையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முற்படுவதாக குறிப்பிட்ட தமிழ்ப்பிரதிநிதிகள், முன்னைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட அளவு கூட தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும் அண்மையில் சர்ச்சைக்குள்ளான கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் ஐ.நா வதிவிடப்பிரதிநிதிக்கு விளக்கமளித்த தமிழ்ப்பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சட்டவிரோத காணி சுவீகரிப்பு முயற்சிகள் பற்றியும் தெளிவுபடுத்தினர்.





