வீடுகளை திருத்துவதற்கு 25ஆயிரம் முதற்கட்டநிதி
மத்திய வங்கியின் சிறந்த செயலாற்றுகை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற அரச நிர்வாகம் ஆகிய முன்னேற்றகரமான போக்கினால் உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வீடுகளுக்கு செல்லவும், சேதடைந்த வீடுகளை திருத்தம் செய்யவும் முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திநாயக்க முன்வைத்த வலியுறுத்தலுக்கு திறைசேரி அனுமதியளித்துள்ளது. இந்த நிவாரண நிதி வழங்கலுக்காக 7.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அவசர நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு உடன் நிவாரணமளிக்குமாறு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி விடுத்த விசேட பணிப்புரைக்கமைய விசேட நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர நிவாரணமளித்தலுக்கான மானியம் கோரியுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணமளிக்கவும், மக்களின் வாழ்க்கையை விரைவாக மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி சகல தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வீடுகளுக்கு செல்லவும், சேதடைந்த வீடுகளை திருத்தம் செய்யவும் முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.இதற்கு திறைசேரி அனுமதியளித்துள்ளது.இந்த தொகை ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாவாகவே காணப்பட்டது.இருப்பினும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்த தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 7.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது அன்றாட பணிகளை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டமாகவே இந்த தொகை வழங்கப்படுகிறது. கிராம சேவகர் ஊடாக இந்த நிவாரண தொகையை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட 3500 ரூபா தற்போது 10,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைக்கு அமைய எதிர்வரும் காலங்களில் நிவாரணங்கள் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும், தொழிற்றுறையை மீண்டும் ஆரம்பிக்கவும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அனர்த்த முகாமைத்துவத்துக்காக வரவு –செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30 பில்லியன் ரூபா சிறந்த முறையில் பயன்படுத்தப்படும்.
மத்திய வங்கியின் சிறந்த செயலாற்றுகை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற அரச நிர்வாகம் ஆகிய முன்னேற்றகரமான போக்கினால் உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தப்படும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினால் தான் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என்றார்.





