உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்
உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு முன்னால் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்களின் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்தன.
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 21-04-2026 அன்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அன்று தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் காலை உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளும் விசேட ஆராதனைகளும் நடைபெற்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கத்தோலிக்க திருச்சபையின் அழைப்பின் பேரில் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்துகொண்டிருந்தனர். அதற்கமைய வத்திக்கான் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
தாக்குதலில் உயிரிழந்த 45 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நினைவாகவும், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காகவும் இவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் தமது இரங்கல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
தாக்குதல் இடம்பெற்ற நேரமான காலை 8.45 மணியளவில், உயிரிழந்தவர்களின் நினைவாக ஆலய மணி ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏந்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு முன்னால் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்களின் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்தன.
நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு கொச்சிக்கடை திருத்தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், காயமடைந்து இன்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் நலனுக்காகவும் விசேட கூட்டுப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு மிலேச்சத்தனமான சம்பவம் நிகழக்கூடாது என வேண்டி அனைத்து மதத் தலைவர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.





