தடைகளை மேலும் விதிக்குமாறும் பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமியிடம் தமிழ்த்தலைவர்கள் கோரிக்கை
டேவிட் லெமி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான தனது சந்திப்பின்போது, இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற விடயத்தை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாக தமிழ்ப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியினால் கூறப்படுகின்ற இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்பது சிறந்த விடயமாகும். ஆனால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்துப் பேசுவதில் ஜனாதிபதிக்கு நாட்டமில்லை. அத்தோடு நாங்கள் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிப் பேசினால், அது இனவாதமாக நோக்கப்படுகின்றது. எனவே இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை நாம் எதிர்க்காத போதிலும், எமது உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை என நாட்டுக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமியிடம் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 17-02-2026 அன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.
சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டிருந்தனர். அதேபோன்று பிரதி பிரதமர் டேவிட் லமியுடன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
அதன்படி முதலாவதாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் டேவிட் லமியினால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் தொடர்பில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அவருக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.
அதனைத்தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று ஏன் அவசியம் என பிரதி பிரதமர் டேவிட் லமிக்கு விரிவாகத் தெளிவுபடுத்திய தமிழ்ப்பிரதிநிதிகள், இதுகுறித்து அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.
அதனை செவிமடுத்த டேவிட் லெமி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான தனது சந்திப்பின்போது, இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற விடயத்தை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாக தமிழ்ப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள், 'இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்பது வரவேற்கத்தக்க விடயம் தான். ஆனால் ஜனாதிபதிக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்துப் பேசுவதில் விருப்பமில்லை. அத்தோடு நாங்கள் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிப் பேசினால், அது இனவாதமாக நோக்கப்படுகின்றது. ஆகவே நாம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை எதிர்க்கவில்லை. இருப்பினும் எமது உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கும் தயாரில்லை' எனத் தெரிவித்தனர்.
அதேபோன்று மாகாணசபைத்தேர்தல் காலதாமதமின்றி விரைவாக நடத்தப்படவேண்டியதன் அவசியம் பற்றி சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், தற்போதுவரை இத்தேர்தலை நடத்துவதில் இழுத்தடிப்புக்கள் தொடர்வதாக விசனம் வெளியிட்டனர். அதுமாத்திரமன்றி மாகாணசபைத்தேர்தலை உடன் நடத்துவதை முன்னிறுத்தி சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதுடன் இவ்விடயங்கள் சார்ந்து பிரித்தானியாவினால் வழங்கப்பட்டுவரும் அழுத்தங்கள் தொடரவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிரித்தானியாவினால் தடைகள் விதிக்கப்பட்டமையை வரவேற்று கருத்துரைத்த தமிழ்ப்பிரதிநிதிகள், மேலும் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைப் பரிசீலித்து, இத்தடை விதிப்பு நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இச்சந்திப்பின்போது கருத்துரைத்த பிரதி பிரதமர் டேவிட் லமி, தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகக் கேள்வியுற்ற பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் சில முக்கிய விடயங்கள் பற்றிப் பேசுமாறு தனக்கு அழுத்தம் வழங்கியதாகவும், எனவே இங்கு நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தான் அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கையர்கள் பலர் பிரித்தானியாவில் வசிப்பதாகவும், அவர்கள் மிக திறமையானவர்கள் எனவும் டேவிட் லமி சுட்டிக்காட்டினார்.





