சீமானை சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களுடன் நடத்திவரும் சந்திப்புக்களின் நீட்சியாக நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்து, தமிழர் பிரச்சினை குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.
அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது தமிழர் தேசம், சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கம், மீனவர் பிரச்சினைக்கான தீர்வு என்பன உள்ளடங்கலாகப் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இங்கு பேசப்பட்ட விடயங்கள் அடங்கிய கடிதமொன்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினரால் சீமானிடம் கையளிக்கப்பட்டது.





