கிழக்கு மாகாணத்தில் STEM கல்வியை ஊக்குவிக்க 100 புதிய அறிவியல் கழகங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் கழகங்கள்
அமைச்சின் பங்களிப்புடன் பாடசாலை அறிவியல் சங்கங்கள் ஊடாக பாடசாலைக் கட்டமைப்புக்குள் STEM கல்வியை பிரபலப்படுத்துவதற்காக பரந்தளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் அரச பாடசாலைகளில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்களை நிறுவும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 100 சங்கங்களை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில், அண்மையில் நடைபெற்றது.
அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களைத் தடைகளாகப் பார்க்காமல், அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய மாணவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களின் கற்பனைத் திறனுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஆர்வத்தை புதியதொரு படைப்பாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் வழிகாட்டல்களையும் இளம் கண்டுபிடிப்பாளர் கழகங்கள் வழங்குகின்றன.
அதேவேளை, STEM கல்வி உட்பட அறிவியல் கல்வியைப் பிரபலப்படுத்தும் திட்டங்களில் பாடசாலைச் சமூகத்தை பயனுள்ள மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஈடுபடுத்துவது பாடசாலை அறிவியல் சங்கங்களின் நோக்கமாகும். இதற்காக ஆண்டு முழுவதும் பாடசாலைகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கருத்து தெரிவிக்கையில், உலகம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் மூலம் அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் நாட்டின் மிக முக்கியமான சொத்தாக விளங்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் மீது முதலீடு செய்வது அவசியமானது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
மேலும் அமைச்சின் பங்களிப்புடன் பாடசாலை அறிவியல் சங்கங்கள் ஊடாக பாடசாலைக் கட்டமைப்புக்குள் STEM கல்வியை பிரபலப்படுத்துவதற்காக பரந்தளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. வெறும் கண்டுபிடிப்புகளுடன் மட்டும் நின்று விடாமல் அவற்றை வணிக ரீதியிலான மதிப்புமிக்க தயாரிப்புகளாக உயர்த்துவதற்கான வழிகாட்டல்கள் வழங்குவதே அமைச்சின் முதன்மை நோக்கமாகும் என்றார்.





