கற்பிட்டியில் பொலிஸ் உள்ளிட்ட மூவர் மற்றும் விமானப்படையினருக்கிடையே பதற்றம் விமானப்படை தளபதி விசேட விசாரணைக்கு உத்தரவு
வெடிகுண்டு அகற்றும் பயிற்சிகள் நடக்கும் வேளையில் இப்பகுதி ஆபத்தான வலயமாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் நுழைவது தடைசெய்யப்படும். மேலும், அங்கு நுழையும் நபர்களின் பாதுகாப்புப் பொறுப்பு விமானப்படையிடமே காணப்படும்.
புத்தளம், கற்பிட்டி பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான துப்பாக்கிச் சுடும் தளத்தில், வெடிகுண்டு அகற்றும் பயிற்சியின் போது அப்பகுதியினுள் நுளைந்த பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட மூவர் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் திகதி இத்தளத்தில் வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முன் அனுமதி அல்லது அறிவிப்பின்றி மூன்று நபர்கள் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது பணியிலிருந்த 7 விமானப்படை வீரர்களும், விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது, வருகை தந்தவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்பதும், ஏனைய இருவரும் பொதுமக்கள் என்பதும் உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு அகற்றும் பயிற்சிகள் நடக்கும் வேளையில் இப்பகுதி ஆபத்தான வலயமாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் நுழைவது தடைசெய்யப்படும். மேலும், அங்கு நுழையும் நபர்களின் பாதுகாப்புப் பொறுப்பு விமானப்படையிடமே காணப்படும். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விமானப்படைத் தளபதி விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.





