ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது: ஹர்ஷண ராஜகருணா
கம்பஹாவில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மதங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தான் இந்த நாட்டுக்கு துஷ;ட சக்திகள் என அந்த பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது. பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 26-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கம் இனம், மதம் மற்றும் கலாசாரத்தின் மீது கோபம் கொண்டுள்ளது. யார் என்ன சீருடை அணிந்திருந்தாலும் தமக்கெதிராக செயற்பட்டால் பதில் தாக்குதல் நடத்துவோம் என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது.
1980களில் தமது அரசியல் கொள்கைகளைக் கடைபிடிக்காதவர்களை இவர் இவ்வாறு தான் கொன்று குவித்தனர். ஜே.வி.பி. என்பது ஒரு பயங்கரவாத கட்சியாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டமைக்கு பொறுப்பு கூற வேண்டிய குழுவாகும். அதனையே தற்போது அமைச்சர் லால் காந்த மீண்டும் நினைவுபடுத்துகின்றார்.
பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அது தமக்கு தேவையற்றது என்றும், தம்மை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு பதில் தாக்குதல் உண்டு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இது மாத்திரமல்ல தேர்தலுக்கு முன்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்.
கம்பஹாவில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மதங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தான் இந்த நாட்டுக்கு துஷ;ட சக்திகள் என அந்த பொலிஸார் கூறியுள்ளனர். அது யாருடைய நிலைப்பாடு? இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே பொலிஸார் கூறுகின்றனர். இதேபோன்று திருகோணமலையிலும் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டது மாத்திரமின்றி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவே ஜே.வி.பி.யின் கலாசாரமாகும். இதனை நாட்டின் கலாசாரமாகவும் மாற்றுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.





