ரணிலின் சட்டத்தரணிகள், சட்டமா அதிபருடன் சந்திப்பு
விசாரணைகள் என்பதால் அது குறித்து தமக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமில்லை என்பதே தனது நிலைப்பாடாகும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் அவர்களிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 166 இலட்சம் பொது நிதியை செலவிட்டு, லண்டனில் இடம்பெற்ற தனது பாரியாரின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்து வரும் தரப்பினர் அரச தரப்பு சட்டத்தரணியான சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணிகளுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோரே சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த வெள்ளியன்று சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆகியோருக்கும் சட்டமா அதிபரால் இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமக்கு அறிவிக்காது குற்றப்புலனாய்வு பிரிவு பிரித்தானியா சென்றுள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணிகள், சட்டமா அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். விசாரணைகள் என்பதால் அது குறித்து தமக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமில்லை என்பதே தனது நிலைப்பாடாகும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் அவர்களிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.
பிரித்தானியாவுக்கு சென்று இது குறித்து ஏன் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என கடந்த வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி வினவியதை நினைவுகூர்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அவ்வாறான பின்னணியில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதிலுள்ள சிக்கல் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும் விசாரணைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கமைய செயற்படுவதாகவும் குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் சட்டத்தரணிகள் கலந்துரையாடலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கடந்த 12ஆம் திகதி பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





